திருவாரூர்,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து திருவாரூர் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கே.கலைவாணன், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் தேவா, நகரசபை முன்னாள் துணை தலைவர் செந்தில், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் தாஜிதீன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் அமுதா சேகர் ஆகியோர் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் மன்னார்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. விஜயன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் தலையாமங்கலம் பாலு, மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தன்ராஜ், நகர செயலாளர் கணேசன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முத்துவேல் ஆகியோர் உள்பட 100 பேரையும், வடுவூரில் சாலை மறியலில் ஈடுபட்ட நீடாமங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மாயவநாதன் உள்பட 10 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கைதை கண்டித்து திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம் அருகே தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அன்பரசன், நகரசபை முன்னாள் உறுப்பினர்கள் முருகை செந்தில்குமார், சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தபத்மநாதன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நன்னிலம் அருகே உள்ள பூந்தோட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை தாங்கினார். பேரளம் கடைத்தெருவில் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதேபோல ஆண்டிப்பந்தலில் திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் குமார், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிவேல் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நன்னிலம் பஸ் நிலையம் அருகில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு வார்டு பிரதிநிதி ராஜ் தலைமை தாங்கினார். இதேபோல கங்களாஞ்சேரியில் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சுந்தர் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். நன்னிலம் ஒன்றியத்தில் 5 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோட்டூர் அருகே பெருகவாழ்ந்தான் பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் தேவதாஸ், மைய செயலாளர் குணசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். சாலை மறியலில் ஈடுபட்ட 24 பேரை பெருகவாழ்ந்தான் போலீசார் கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலினை போலீசார் கைது செய்யப்பட்டதை கண்டித்து முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கலந்து கொண்ட திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் கார்த்திக், ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் குடவாசல் ஏரவாஞ்சேரி கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுபட்ட குடவாசல் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோதிராமன், மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.