சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பெரியார் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர் சென்னை மாநகராட்சி 188-வது தி.மு.க. வட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் மடிப்பாக்கம் ராஜாஜி நகரில் உள்ள கட்சி அலுவலகம் அருகே 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக விசாரிக்க பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் பிரதீப் தலைமையில் உதவி கமிஷனர்கள் பிராங் டி ரூபன், அமீர் அகமது உள்பட போலீசார்கள் அடங்கிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், செல்வம் ரியல் எஸ்டேட் தொழில் போட்டி காரணமாக கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேர் மீது சந்தேகம் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், செல்வத்தின் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ.க்கள் அரவிந்த் ரமேஷ், பிரபாகர் ராஜா உள்பட தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து மடிப்பாக்கம் மயானத்தில் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதன் காரணமாக மடிப்பாக்கத்தில் கடைகள் அனைத்தும் 2-ம் நாளாக அடைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.