திண்டுக்கல்,
திண்டுக்கல் நேருஜி நினைவு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 1960-ம் ஆண்டு முதல் 1980 வரை படித்த மாணவர்கள் சார்பில், அவர்களுடைய ஆசிரியர்களை கவுரவிக்கும் விழா நேற்று மாலை நடந்தது. பள்ளியில் நடந்த இந்த விழாவில் 32 முன்னாள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் 10 பேர் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், 22 பேர் 75 முதல் 85 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
ஒவ்வொரு ஆசிரியரையும் அழைத்து வர தனி கார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கார்கள் அனைத்தும் மணமக்கள் வரும் கார் போல பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த கார் ஆசிரியர்களின் வீட்டுக்கே சென்று அவர்களுடைய குடும்பத்தினரையும் சேர்த்து அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்தது.
ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தவுடன் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். மேலும், ஜவுளி, கம்பிளி போர்வை, தண்ணீரை சூடுபடுத்தும் கருவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மாணவர்கள் பரிசாக வழங்கினர். சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு மாணவர்கள்- ஆசிரியர்கள் சந்தித்தது மிகவும் நெகிழ்ச்சியான சம்பவமாக அமைந்தது. சில ஆசிரியர்கள் பணிநிறைவு செய்து 30 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் சந்திப்பதாக தெரிவித்தனர்.
இதேபோல மாணவர்களும் பல ஆண்டுகளுக்கு பிறகு தங்களது பழைய நண்பர்களை பார்த்தவுடன் கட்டித்தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்களின் காலை தொட்டு ஆசீர்வாதம் வாங்கி கொண்டனர். இதையடுத்து, மாணவர்கள் தங்களது பள்ளி கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்து பேசினர்.
இந்த விழாவில் முன்னாள் தமிழ் ஆசிரியர் முருகையா பேசும்போது, நீங்கள் தொழில் அதிபர், டாக்டர், வக்கீல், அரசு அதிகாரிகள் என எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். மனிதநேயத்தை காப்பாற்றினால் தான் சமூகம் வளர்ச்சி அடையும் என்றார்.
பள்ளியில் கடந்த காலங்களில் நடைபெற்ற விழாவின்போது எடுத்த புகைப்படங்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன. இதனை ஆசிரியர்கள்- மாணவர்கள் சேர்ந்து பார்வையிட்டனர். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை நேரில் சென்று பார்த்து பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்த விழாவில் சுமார் 600 முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களில், பலர் தொழில் அதிபர்கள், டாக்டர், வக்கீல், போலீஸ், அரசு அதிகாரிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விழா முடிந்து இரவு நேரமாகியும் மாணவர்கள் ஒருவரை ஒருவர் பிரிய மனமில்லாமல் தவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.