ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தீ
சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு தினமும் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகள் என ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று காலை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உள்ள நிர்வாக அலுவலக ஏ.பிளாக் பகுதியில் மின்சார அறையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்து எரிந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், உடனே தங்களிடம் இருந்த 30-க்கும் மேற்பட்ட தீ அணைப்பான் கருவிகளால் தீயை அணைக்க முயன்றனர்.
ஆவணங்கள் எரிந்து சாம்பல்
இதற்கிடையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.இதனால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டதுடன், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. நோயாளிகளுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் தீ விபத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தீ விபத்தில் நிர்வாக அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் மட்டும் சிறிது தீயில் எரிந்து சாம்பலாயின.
இதுபற்றி ஸ்டான்லி ஆஸ்பத்திரி டீன் பாலாஜி கூறும்போது, தீ விபத்தால் எந்த பாதிப்பும் இல்லை. சிறிய தீ விபத்துதான் என்பதால் உடனடியாக தீ அணைக்கப்பட்டு விட்டது என்றார். தீ விபத்து குறித்து ஸ்டான்லி ஆஸ்பத்திரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.