சொந்த நிலத்தில் வெட்டி அமைக்கப்பட்ட குளங்களிலும் இந்த முறையில் மீன்களை வளர்க்கலாம். 6 மாத காலம் மற்றும் அதற்கும் கூடுதலான காலம் நிலைத்திருக்கும் நீர்நிலைகளில், இம்முறையில் மீன் வளர்க்கலாம். நன்னீர் மீன் வளர்ப்பு முறைகளில் கூட்டு மீன் வளர்ப்பு என்பது பிரசித்திபெற்றது. அது பற்றி பார்ப்போம்!
அங்ககக் கழிவுப்பொருட்கள், உரச்சத்துக்கள், நுண்தாவர மிதவைகள், நுண் விலங்கின மிதவைகள், நுண்பாசிகள், மட்கும் கழிவுகள் போன்றவை நீரில் உருவாகுகின்றன. அவைகளில் இருந்து அடிமட்ட சிறு உயிரினங்கள் மற்றும் நுண்ணுயிரினங்கள், நீர் நிலைகளில் வெவ்வேறு மட்டங்களில் இயற்கையாகவே உருவாகின்றன. அவைகளை சிலவகை மீன் இனங்கள் உணவாக்கிக்கொள்கின்றன.
குளங்களில் இயற்கையாகவே உற்பத்தியாகும் உணவு வகைகளை உண்ணும் தன்மை கொண்ட, வேகமான வளர்ச்சியும் மாறுபட்ட உணவுப்பழக்கமும் கொண்ட பல பெருங்கெண்டை மீன் இனங்களை ஒரே குளத்தில் தேவைக்கேற்ற விகிதாச்சாரங்களில் இருப்புச்செய்து, அங்குள்ள இயற்கை உணவு வகைகளை பிரதானமாகப் பயன்படுத்தி பெருமளவு மீன்களை வளர்ப்பதே, கூட்டு மீன் வளர்ப்பின் அடிப்படைத் தத்துவமாகும்.
இம்முறையில் கட்லா, ரோகு, மிர்கால் போன்ற இந்தியப் பெருங்கெண்டை மீன் இனங்களையும், வெள்ளிக்கெண்டை, போட்லா, புல்கெண்டை, சாதாக்கெண்டை ஆகிய வளிநாட்டு பெருங்கெண்டை இனங்களையும் வளர்க்கலாம். இம்முறையில் நீர்நிலையிலே உருவாகும் இயற்கை உணவுகள் தவிர தவிடு, கடலைப் புண்ணாக்கு, தானியங்கள் சேர்க்கப்பட்ட மேலுணவையும் மீன்களுக்கு வழங்கலாம். அதன் மூலம் அதிக மீன் உற்பத்தி பெற வாய்ப்பிருக்கிறது.
கூட்டுமீன் வளர்ப்பிற்கு பள்ளமான வயல் பகுதிகளிலும், வண்டல், மணல், களிமண் கலந்த மண்தன்மை கொண்ட இடங்களிலும் சொந்தமாக குளம் அமைத்துக் கொள்ளலாம். நீர்க்கழிவு ஏற்படும் மண்தன்மை கொண்ட இடங்களில் குளங்களை அமைத்தால் அதிக அளவில் நீர் விரயம் ஏற்படும். இதனைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் அதிக முதலீட்டு செலவினை ஏற்படுத்தும்.
மீன் வளர்ப்புக் குளங்களை ஏக்கர் முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாக செவ்வக வடிவில் அமைத்துக் கொள்ளலாம். ஒரு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட குளங்களிலும் மீன்கள் நன்றாக வளரும் என்ற போதிலும் சொந்தக் குளங்களை அதிகப்பரப்பளவில் அமைக்கும்போது வேறுபல பிரச்சினைகள் ஏற்படும். கரைக்குத் தேவையான அளவு மண்ணை மட்டும் தோண்டி எடுத்து கரைகள் அமைத்து குளத்தை உருவாக்கிடலாம். இதனால் குளம் அமைக்கும் செலவு குறையும். அவ்வாறு செய்தால் உரிமையாளர் இடத்திலுள்ள மண்ணும் பண்ணையை விட்டு வெளியேற்றப்படுவதில்லை.
குளங்களை மீன் வளர்க்கத் தயார் செய்யும்போது பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் குளத்தின் தரைப்பகுதியை நன்கு வெடிக்குமளவிற்கு காயவிடவேண்டும். பின்பு வெடித்த குளத்தரைப் பகுதியிலிருந்து வண்டல் கழிவுகளை அகற்றவேண்டும். அதிகளவில் குளங்களில் உரச்சத்து சேருவது மீன் வளர்ப்பின் போது பல இடர்பாடுகளை ஏற்படுத்தும். எனவே வண்டல் வடிவில் இருக்கும் உரக்கழிவுகளை ஆண்டுதோறும் குளங்களிலிருந்து அப்புறப்படுத்துவது குளங்களில் நீரின் தன்மைகளை நல்லமுறையில் பராமரித்திட உதவும்.