திருச்சி,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருச்சி பாய்லர் ஆலை நிறுவனம் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பில் மளிகை பொருட்கள், தனியார் பள்ளி சார்பில் ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் மதிப்பில் அரிசி, கொசுவர்த்தி, பிஸ்கட் பாக்கெட், கோதுமை மாவு, போர்வை, துண்டு, கைலி, காய்கறிகள், சோப்பு, பற்பசை, தண்ணீர் பாட்டில்கள் போன்ற நிவாரண பொருட்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
அனைத்து தாசில்தார்கள் சார்பில் ரூ.80 ஆயிரம் காசோலையும், புத்தாநத்தம் அ.தி.மு.க. பிரமுகர் சார்பில் ரூ.40 ஆயிரத்துக்கான காசோலையையும் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. இவ்வாறு சேர்ந்த நிவாரண பொருட்கள் அனைத்தும் 4 வாகனங்கள் மூலம் தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காவேரி மருத்துவமனை, சோழிய வேளாளர் சங்கம், பார்வையற்றோர் நலச்சங்கம், அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டன.
முசிறியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ரூ.4 லட்சம் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு போர்வை, வேட்டி, சேலைகள், கைலி, அரிசி, மெழுகுவர்த்தி, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை சரக்கு ஆட்டோ மூலம் அனுப்பப்பட்டது.
மண்ணச்சநல்லூர் ஒன்றிய மனிதநேய மக்கள் கட்சி சார்பாக திருச்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் அப்துல் மாலிக், பொருளாளர் முகமது இப்ராஹிம் தலைமையில் அக்கட்சியினர் மண்ணச்சநல்லூர் கடைவீதி, சந்தை மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் ஆகியோரிடத்தில் அரிசி, பிஸ்கட், பால், கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, போர்வை, பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்ட பொருட்களை சேகரித்தனர். அதனை வேதாரண்யம் அருகே வேட்டைக்கார பண்ணை என்ற இடத்தில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க, வேன் மூலம் மண்ணச்சநல்லூரில் இருந்து கொண்டு சென்றனர்.
பெட்டவாய்த்தலை காவிரி மீட்பு குழு மற்றும் பெட்டவாய்த்தலை மக்களின் சார்பாக கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது.