மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேர் கைது

திண்டிவனம் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாக்யலட்சுமி, குமரேசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 5 மணியளவில் வடசிறுவள்ளூர் கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தலையில் இரும்பு தகடுகளை சுமந்து வந்த 2 பேர், போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் திண்டிவனம் அடுத்த கொங்கரப்பட்டையை சேர்ந்த சிவானந்தம் மகன் அஜித்(வயது 19), ரெட்டணையை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பதும், அங்குள்ள துணை மின் நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தகடுகளை திருடி கொண்டு வந்தபோது பிடிபட்டதும் தெரிந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் வானூரை சேர்ந்த ராசு மகன் சிவராமன்(48), மேல்சேவூரை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் வெங்கடேசன்(28) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து தொடர்ந்து வெள்ளிமேடுபேட்டை பகுதியில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்த மின்மோட்டார்கள், வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் தாதாபுரம் கல்லேரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடியதும் தெரியவந்தது.

இதையடுத்து வெள்ளிமேடுபேட்டை பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சிறுவனையும், அஜித்தையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் சிவராமன், வெங்கடேசன் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து ஒரு மொபட், 2 மின் மோட்டார்கள் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு தகடுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு