பழனி
வழக்கமாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும். ஆனால் பழனியில் தற்போது இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக இளநீர், தர்பூசணி, வெள்ளரி விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
பழனி, நெய்க்காரப்பட்டி, கீரனூர், பாலசமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளைச்சலாகும் இளநீர்களை விவசாயிகளும், வியாபாரிகளும் பழனி நகர் பகுதிக்கு கொண்டு வந்து சாலையோரத்தில் கடைகள் அமைத்து விற்பனை செய்கின்றனர். இளநீரின் தரத்தை பொறுத்து அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஒரு இளநீர் ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது. பழனியில் அதிகாலை நேரத்தில் பனியின் தாக்கம் இருந்தாலும் அதன் பின்னர் சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நகரவாசிகள் இளநீர்களை வாங்கி பருக தொடங்கி உள்ளனர். அதே போல் தர்பூசணி பழங்களின் விற்பனையும் தற்போது அமோகமாக உள்ளது.
பழனியை அடுத்த ஆண்டிப்பட்டியில் இருந்து தர்பூசணி பழங்கள் பழனிக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. ஒரு கிலோ தர்பூசணி ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு துண்டு தர்பூசணி பழம் ரூ.10-க்கு விற்பனையாகிறது.
இது தவிர கம்மங்கூழ், கேப்பைக்கூழ் மற்றும் மோர் ஆகியவையும் சூரியனின் வெப்பத்தாக்குதலில் இருந்து நகர மக்களை காக்கின்றன. ஒரு குவளை கூல் ரூ.5-க்கும், மோர் ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.
பழனியில் வசிக்கும் ஏழை மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை இவற்றை வாங்கி பருகுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.