மாவட்ட செய்திகள்

கோட்டப்பட்டி அருகே மூதாட்டி அடித்துக்கொலை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

அரூர்,

கோட்டப்பட்டி அருகே மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டி அருகே உள்ள சிட்லிங் கிராமத்தை சேர்ந்தவர் குப்பபோயன். இவருடைய மனைவி லட்சுமி (வயது60). குப்பபோயன் இறந்து விட்டதால் லட்சுமி தனது மகன் ஆனந்தன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2-ந்தேதி ஆனந்தன் தனது மனைவி முனியம்மாளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர் மனைவியுடன் மாரண்டஅள்ளியில் உள்ள மூத்த மகள் கிரிஜா வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் லட்சுமி, பேரன் காளியப்பன், பேத்தி நந்தினி ஆகியோருடன் வீட்டில் இருந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை காளியப்பன் சேலத்தில் உள்ள கல்லூரிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பினார்.

அப்போது லட்சுமி கொலை செய்யப்பட்டு சிட்லிங்-மலைத்தாங்கி ரோட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த காளியப்பன் நடந்த சம்பவம் குறித்து தனது தந்தைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் சிட்லிங் கிராமத்திற்கு விரைந்து வந்தார். இதுகுறித்து கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுசில் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவத்தன்று இரவு மூதாட்டி தனது பேத்தி நந்தினியுடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் வந்து மூதாட்டியை தனியாக அழைத்து சென்று அடித்துக்கொலை செய்து சிட்லிங்- மலைத்தாங்கி ரோட்டில் வீசி சென்றது தெரியவந்தது.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லபாண்டியன், கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அவரது பேத்தி நந்தினியிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதில் மர்ம நபர்கள் யார்? எதற்காக மூதாட்டியை அடித்துக்கொலை செய்தனர்? என்ற விவரம் தெரியவில்லை.

மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை