மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் பயங்கரம்: கணவன், மனைவி குத்திக்கொலை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது

கிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் கணவன், மனைவியை குத்திக்கொலை செய்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி வீரப்பன் நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். இவருக்கு இளங்கோவன் (வயது 58), புகழேந்தி (55), கரிகாலன் (50) என 3 மகன்கள் இருந்தனர். அதே பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர்கள் 3 பேரும் மர வேலை செய்து வந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபால் இறந்து விட்டார். அவருக்கு சொந்தமாக 3 ஆயிரம் சதுரஅடி நிலம் உள்ளது. அதை பிரிப்பதில் அண்ணன், தம்பி குடும்பத்தினர் இடையே பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த நிலம் தொடர்பாக அவர்கள் 3 பேரின் குடும்பத்தினரிடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

கணவன், மனைவி கொலை

நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இளங்கோவனின் மகன் லோகேஷ் (19), இவருடைய நண்பரான காவேரிப்பட்டணத்தை சேர்ந்த சதீஷ் (19) ஆகியோர் புகழேந்தியின் வீட்டிற்கு வந்து கதவை தட்டினா. இந்த சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருந்த புகழேந்தி எழுந்து வீட்டின் கதவை திறந்து பார்த்தார்.

அப்போது லோகேசும், சதீசும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக புகழேந்தியை குத்தினர். இதில் படுகாயம் அடைந்த அவர் வலிதாங்க முடியாமல் அலறினார். இதைக்கேட்டு அவரது மனைவி பப்பிராணி (45) அங்கு ஓடி வந்தார். அவரையும் லோகேஷ், சதீஷ் ஆகியோர் கத்தியால் குத்தினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே 2 பேரும் துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.

2 பேருக்கு கத்திக்குத்து

இதற்கிடையே, சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசித்து வந்த கரிகாலன், அவரது மனைவி சரஸ்வதி (42) ஆகியோர் அங்கு ஓடிவந்தனர். அந்த நேரம் கையில் கத்தியுடன் இருந்த லோகேசும், சதீசும் அவர்களையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

இந்த நிலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் புகழேந்தி, பப்பிராணி ஆகியோர் கொலையுண்டு கிடப்பதையும், கரிகாலன் சரஸ்வதி ஆகியோர் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து உடனடியாக கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் கொலையுண்ட புகழேந்தி, பப்பிராணி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல கத்திக்குத்தில் காயம் அடைந்த கரிகாலன், சரஸ்வதி ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் சிக்கினர்

இதற்கிடையே கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரத்தக்கறை படிந்த உடையுடன் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் புகழேந்தி, பப்பிராணி ஆகியோரை கொலை செய்த லோகேஷ், சதீஷ் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

கைதான லோகேஷ் தனியார் கல்லூரி ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சொத்து பிரச்சினைக்காக அவர் தனது 2 சித்தப்பா, 2 சித்திகளை கொலை செய்ய முயன்றதும், அதில் ஒரு சித்தப்பா, சித்தியை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட புகழேந்திக்கு ஒரு மகள் உள்ளார். இவர் அச்சமங்கலத்தில் உள்ள சித்தியின் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.

பரபரப்பு

இந்த கொலை தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிருஷ்ணகிரியில் சொத்து தகராறில், சித்தப்பா, சித்தியை கல்லூரி மாணவர் தனது நண்பருடன் சேர்ந்து குத்திக்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை