தாம்பரம்,
தாம்பரத்தை அடுத்த சேலையூர், பராசக்தி நகரை சேர்ந்தவர் வரதன் (வயது 42). தனியார் தொலைபேசி நிறுவனத்தில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பொன்னி (38).
நேற்று முன்தினம் மாலை கணவன், மனைவி இருவரும் சிட்லபாக்கம் பகுதியில் உள்ள கடைக்கு சென்றனர். பின்னர் அவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
வீட்டுக்கு செல்லும் வழியில் வரதன் ஒரு பெட்டி கடைக்கு சென்றார். வீட்டுக்கு வந்த பிறகு வரதன் தன் கையில் அணிந்திருந்த தங்க மோதிரம் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அதன்பின்னர் கணவன், மனைவி இருவரும் பெட்டிக்கடை அமைந்துள்ள பகுதிக்கு சென்று தவறவிட்ட மோதிரத்தை தேடினர். ஆனால் சுமார் 1 மணி நேரம் தேடியும் மோதிரம் கிடைக்கவில்லை.
இதையடுத்து இருவரும் வீட்டுக்கு திரும்பினர். அப்போது மோதிரம் தொலைந்துபோனது தொடர்பாக கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வரதன், பொன்னியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பொன்னி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் பொன்னியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.