பெங்களூரு,
முதல்-மந்திரி சித்தராமையா முன்பு ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்தார். அப்போது மந்திரியாகவும், துணை முதல்-மந்திரியாகவும் பணியாற்றி இருக்கிறார். ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்தபோது தனக்கு முதல்-மந்திரி பதவி கிடைப்பதை தேவேகவுடா குடும்பத்தினர் தடுத்துவிட்டனர் என்று சித்தராமையா அடிக்கடி கூறுவது உண்டு.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் நடைபெற்ற ஜனதா தளம்(எஸ்) கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய தேவேகவுடா, சித்தராமையாவை அரசியலில் வளர்த்துவிட்டது நான் செய்த மிகப்பெரிய தவறு என்று ஆவேசமாக கூறினார். இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதத்தில் சித்தராமையா நேற்று கருத்து தெரிவித்தார்.
அதாவது பெங்களூரு எம்.எல்.ஏ.க்கள் பவனில் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களுக்காக புதிதாக ஒரு கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதன் பிறகு அவர் இதுபற்றி நிருபர்களிடம் பேசியதாவது:-
ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக இருந்தபோது எனக்கு மந்திரி பதவி கிடைத்தது. மந்திரி பதவியை தேவேகவுடா வழங்கவில்லை. ராமகிருஷ்ண ஹெக்டே தான் என்னை மந்திரி ஆக்கினார். அதன் பிறகு எனக்கும், ராமகிருஷ்ண ஹெக்டேவுக்கும் இடையே இருந்த நல்லுறவு குறைந்தது. அந்த நேரத்தில் தேவேகவுடா தன்னுடன் என்னை சேர்த்துக் கொண்டார். அரசியலில் என்னை வளர்த்துவிட்டதாக தேவேகவுடா சொல்கிறார்.
அவருடைய உதவியால் நான் அரசியலில் வளரவில்லை. ராமகிருஷ்ண ஹெக்டே தான் என்னை அரசியலில் வளர்த்துவிட்டார். 1983-ம் ஆண்டு எனது சொந்த பலத்தில் தேர்தலில் வெற்றி பெற்றேன். அப்போது எனக்கு தேவேகவுடா யார் என்றே தெரியாது. 2 முறை தேர்தலில் யாருடைய உதவியும் இல்லாமல் வெற்றி பெற்றேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.