பெங்களூரு: ரெயில் முன் பாய்ந்து மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. பள்ளி முதல்வர் மீது மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
மாணவிக்கு கண்டிப்பு
பெங்களூரு யஷ்வந்தபுரம் அருகே வசித்து வரும் தம்பதியின் மகள் ரம்யா மூர்த்தி (வயது 15). இந்த மாணவி ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த ஆண்டு (2021) மாணவி ரம்யா பள்ளிக்கு நொறுக்கு தீனிகளை எடுத்து சென்றதாக தெரிகிறது. மேலும் வகுப்றையில் வைத்து மாணவி சாப்பிட்டதாகவும் தெரிகிறது. இதுபற்றி ஆசிரியருக்கு தெரியவந்ததும், ரம்யாவை கண்டித்துள்ளார்.
மேலும் பள்ளியின் முதல்வருக்கும், ஆசிரியர் தெரிவித்தா. இதையடுத்து, ரம்யாவின் தாயை பள்ளிக்கு வரவழைத்த முதல்வர், ரம்யா பள்ளிக்கு நொறுக்கு தீனி கொண்டு வந்ததை கண்டித்ததுடன், அவரது தாயை எச்சரித்ததாகவும் தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பள்ளியின் முதல்வர் மீது மனித உரிமைகள் ஆணையத்தில் ரம்யாவின் தாய் புகார் அளித்திருந்தார்.
முதல்வர் மீது குற்றச்சாட்டு
அதன்பிறகு, ரம்யாவுக்கு பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபயிற்சிக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற மாணவி ரம்யா, யஷ்வந்தபுரம் ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.
தற்கொலை செய்யும் முன்பாக மாணவி எழுதி வைத்திருந்த கடிதமும் போலீசாருக்கு கிடைத்தது. அதில், பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை முடிவை எடுத்திருப்பதாகவும், பள்ளி முதல்வரை தான் வெறுப்பதாகவும் எழுதி வைத்திருந்தார். இதுகுறித்து யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.