கூடலூர்,
கூடலூர் மெயின் ரோட்டில் வருவாய்த்துறைக்கு சொந்தமாக 7 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டினார். இதைத்தொடர்ந்து அரசு நிலத்தை காலி செய்யுமாறு சம்பந்தப்பட்ட நபருக்கு பலமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அந்த கட்டிடத்தில் கட்டுமான பொருட்கள்(ஹார்டுவேர்) விற்பனை செய்யும் கடை நடத்தப்பட்டு வந்தது.
கடந்த வாரம் அரசு நிலத்தை மீட்கும் வகையில் அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்க வருவாய்த்துறையினர் வந்தனர். அப்போது கட்டிட உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டிடத்துக்குள் அமர்ந்து இருந்தனர். இதனால் வருவாய்த்துறையினர் சீல் வைக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் மறுநாள் விடியற்காலையில் வந்து கட்டிடத்துக்கு சீல் வைக்க முயன்றனர். ஆனால் அப்போதும் கட்டிட உரிமையாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடைக்குள் அமர்ந்து இருந்தனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்ட நிர்வாகம் உத்தரவின்பேரில் கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், தாசில்தார் மேகநாதன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் நேற்று காலை 5.30 மணிக்கு அந்த ஆக்கிரமிப்பு கட்டிடத்துக்கு சீல் வைக்க வந்தனர். அப்போதும் கட்டிட உரிமையாளர் மற்றும் குடும்பத்தினர் உள்ளே அமர்ந்து இருந்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் அவர்களை வெளியேற்றினர்.
இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் கட்டிடத்தில் பொருத்தி இருந்த பெயர் பலகைகள் உடனடியாக அகற்றப்பட்டன. பின்னர் அரசு நிலத்தில் அத்துமீறி நுழையக் கூடாது, மீறினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பேனர் ஒட்டப்பட்டது.