கடையநல்லூர்,
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மேற்கு மலம் பேட்டை தெருவை சேர்ந்தவர் முகம்மது இஸ்மாயில் (வயது 62). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை அவர் தனது மோட்டார் சைக்கிளில் கடையநல்லூரில் இருந்து கிருஷ்ணாபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். நகரசபை நீரேற்றும் நிலையம் அருகே சென்றபோது, அந்த பகுதியில் ராஜபாளையத்தில் இருந்து கேரளாவுக்கு சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி சென்ற லாரி எதிர்பாராதவிதமாக முகம்மது இஸ்மாயில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முகம்மது இஸ்மாயில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முகம்மது இஸ்மாயிலின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.