பெங்களூரு,
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
பசுக்களை பாதுகாப்பு குறித்து அதிகமாக பேசும் பா.ஜனதாவினர், உண்மையில் பசுக்களை பாதுகாப்பது இல்லை என்பதற்கு இங்கே ஒரு சிறந்த உதாரணம் உள்ளது. அதாவது, கோமாரி நோய் பரவலால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடுப்பூசி இயக்கத்தை மத்திய அரசு இன்னும் தொடங்கவே இல்லை.
மாநில அரசும் கேட்கவில்லை. இதனால் கால்நடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொற்று நோயான இந்த கோமாரி நோய் மிக கொடியது. அது மிக வேகமாக பரவக்கூடியது. இந்த நோயால் பாதிக்கப்படும் பசுக்கள் விரைவாக செத்து விடுகின்றன. பசுக்களின் நிலையை பார்க்க முடியாமல் விவசாயிகள் கடும் நெருக்கடியில் உள்ளனர்.
கர்நாடகத்தில் 4 மாவட்டங்களில் இந்த கோமாரி நோய் பரவியுள்ளது. மத்திய அரசு தடுப்பூசி இயக்கத்தை தொடங்காதது தான் இந்த நோய் பரவலுக்கு காரணம். கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதமே பசுக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தடுப்பூசி இயக்கத்தை தொடங்கவில்லை என்று கால்நடைத்துறையினர் சொல்கிறார்கள்.
பசுக்களை பாதுகாப்பது குறித்து அடிக்கடி பேசும் பா.ஜனதாவினர், இப்போது தடுப்பூசி போடாமல் அந்த பசுக்களை வதம் செய்து வருகின்றனர். சிக்பள்ளாப்பூர், பெங்களூரு, பெங்களுரு புறநகர், ராமநகர் ஆகிய மாவட்டங்களில் இந்த கோமாரி நோய் பரவியுள்ளது. நோய் பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும்.
இந்த பரவலை தடுக்காவிட்டால் பால் உற்பத்தி தொழில் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அடுத்த ஆண்டு (2022) ஆண்டு திட்டமிட்டுள்ள கோமாரி நோய் தடுப்பூசி இயக்கத்தை தடையின்றி தொடங்க வேண்டும். இறந்த பசுக்களின் உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.