மாவட்ட செய்திகள்

கொடுங்கையூரில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி சாவு - தாய் கண் எதிரே பரிதாபம்

கொடுங்கையூரில், தாய் கண் எதிரேயே 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

தினத்தந்தி

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகர் 150-வது பிளாக்கை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 30). தையல்காரர். இவருடைய மனைவி மலர்(25). இவர்களுக்கு 4 வயதில் மவுசிகா என்ற மகள் இருந்தாள்.

நேற்று முன்தினம் இரவு மலர், 3-வது மாடியில் நின்று தனது மகள் மவுசிகாவுக்கு சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருந்தார். அவரது செல்போனுக்கு அழைப்பு வரவே, அதில் பேசிக்கொண்டு இருந்தார். மவுசிகா, மாடியில் விளையாடிக்கொண்டு இருந்தாள்.

அப்போது எதிர்பாராதவிதமாக 3-வது மாடியில் இருந்து சிறுமி மவுசிகா தவறி கீழே விழுந்தாள். தனது கண் எதிரேயே மகள் கீழே விழுந்து விட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த மலர், கூச்சலிட்டார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமியை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி மவுசிகா, நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தாள். சிறுமியின் உடலை பார்த்து அவளது பெற்றோர் கதறி அழுதனர். இது பார்க்க பரிதாபமாக இருந்தது.

சம்பவம் தொடர்பாக கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து