குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலை சுங்ககேட் பகுதியைச் சுற்றியுள்ள உள்ள நான்கு திசைகளிலும் உள்ள சாலைகளின் வழியாக கரூர், திருச்சி, மணப்பாறை, முசிறி உள்ளிட்ட ஊர்களின் மார்க்கமாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, தஞ்சை, பெரம்பலூர் போன்ற பல முக்கிய நகரப்பகுதிகளுக்கும், பல வெளி மாநிலங்களுக்கும் பஸ், லாரி, வேன், கார் போன்ற ஏராளமான வாகனங்கள் தினந்தோறும் சென்று வருகின்றன.
அதுபோல குளித்தலை சுங்ககேட் பகுதி வழியாக பல கிராமப்பகுதிகளுக்கும் வாகனங்களில் பலர் பயணித்து வருகின்றனர். நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களுக்கு குளித்தலை சுங்ககேட் ஒரு முக்கிய மையப்பகுதியாக இருந்து வருகிறது. இந்தநிலையில் குளித்தலை சுங்ககேட் வழியாக உள்ள நான்கு திசைகளில் உள்ள சாலை வழியாக அடிக்கடி பயணம் செய்பவர்கள் தவிர, வெளியூர்களில் இருந்தும் பலர் வாகனங்களில் வந்து செல்கின்றனர்.
அதுபோல் வாகனங்களில் வருபவர்கள் தாங்கள் செல்லவேண்டிய ஊர் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் வழிகாட்டி பெயர் பலகை சுங்ககேட் பகுதியில் இல்லை. இதனால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைகின்றனர். அதுபோல் வருபவர்கள் பகல் நேரங்களில் பயணம் செய்யும்போது, பலரிடம் வழிகேட்டுக்கொண்டு சென்றுவிடுகின்றனர். ஆனால் இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் வழிதெரியாமல் சிலநேரங்களில் சிரமத்திற்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுவருகிறது. எனவே குளித்தலை சுங்ககேட் பகுதியில் நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களை அனைவரும் அறியும் வகையில், வழிகாட்டும் பெயர் பலகை வைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.