சங்கரன்கோவில்,
நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் கோமதிபுரம் இரண்டாம் தெரு பகுதியில், சுமார் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அந்த பகுதியில் குடிநீர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு வினியோகம் செய்யப்பட்டது. அதிலும் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள கோவிலில் கொடை விழா நடந்து கொண்டிருப்பதால், குடிநீர் வழங்கக்கோரி நகராட்சி ஆணையாளர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் குடிநீர் வழங்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சங்கரன்கோவில்-ராஜபாளையம் சாலையில் உள்ள வாட்டர் டேங்க் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார், சாலைமறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இருப்பினும் உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாட்டர் டேங்க் முன்பு போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து வாட்டர் டேங்கில் இருந்து குடிநீர் பிடித்துக் கொண்டு செல்லப்பட்ட டேங்கர் லாரியை வழிமறித்து, பொதுமக்களுக்கு குடிநீர் இல்லாத பட்சத்தில் தனியார்களுக்கு குடிநீர் சப்ளை செய்வதா என கூறி வாகனத்தை மறித்தனர். இதனிடையே அங்கு வந்த இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, உடனடியாக குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.