மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தில், நொய்யல் ஆற்றின் கிளை ஓடைகளில் 2,943 தடுப்பணைகள் - அதிகாரி தகவல்

கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நொய்யல் ஆற்றின் கிளை ஓடைகளில் 2,943 தடுப்பணைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட திட்ட அதிகாரி தெரிவித்தார்.

தினத்தந்தி

கோவை,

கோவையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நொய்யல் ஆறு, மாதம்பட்டி, ஆலாந்துறை, பேரூர், கோவை வழியாக திருப்பூர் மாவட்டத்துக்கு சென்று பின்னர் காவிரி ஆற்றில் கலக்கிறது. இந்த ஆறு மூலம் ஏராளமான குளங்கள் தண்ணீர் பெற்று வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நொய்யல் ஆற்றில் எப்போதுமே தண்ணீர் சென்று வந்தன. ஆனால் இந்த ஆற்றுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் நீரோடைகள் ஆக்கிரமிப்பு காரணமாக மழைக்காலத்தில் மட்டுமே நொய்யல் ஆற்றில் தண்ணீர் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இந்த ஆற்றுக்கு தண்ணீர் வர காரணமாக இருக்கும் கிளை ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி, அந்தப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நொய்யல் ஆற்றின் கிளை நதியான கோவையில் ஓடும் கவுசிகா நதி, சங்கனூர் ஓடை, மற்றும் கிளை ஓடைகளில் சிறிய அளவிலான தடுப்பணைகள் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இது குறித்து கோவை மாவட்ட ஊரக முகமை திட்ட அதிகாரி ரூபன் சங்கர் ராஜ் கூறிய தாவது: -

கோவையில் ஓடும் கவுசிகா நதி, அதன் கிளை ஓடைகள் மற்றும் நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் வரும் கிளை ஓடைகளில் மழை பெய்யும்போது தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும். ஆனால் மழை இல்லை என்றால் வறண்டே கிடக்கும். இதனால் வறட்சி காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விடுகிறது. எனவே கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில், நொய்யல் ஆறு, கவுசிகா நதி, சங்கனூர் ஓடையின் கிளை ஓடைகளில் மொத்தம் 2,943 சிறிய அளவிலான தடுப்பணைகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்போது 250 தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளன. இதில் உள்ள கற்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படுவதை தடுக்க அதன் மீது இரும்பினால் ஆன வலையும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தடுப்பணையின் அருகே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதி போன்று 20 அடி ஆழத்தில் குழி தோண்டி அதனுள் மணல், கற்கள் போடப்பட்டு செறிவூட்டும் கிணறும் அமைக்கப்படுகிறது.

இதன் மூலம் ஓடையில் தண்ணீர் வரும்போது இந்த செறிவூட்டும் கிணற்றில் தண்ணீர் இறங்குவதால் பூமிக்குள் தண்ணீர் எளிதாக சென்று விடுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர வாய்ப்பாக அமைகிறது. அதன்படி கவுசிகா நதியில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தடுப் பணைகள் அமைத்து அதன் அருகே செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் அனைத்தும் வேகமாக நடந்து வருகிறது.

நொய்யல் ஆற்றின் கிளை ஓடைகளில் இதுபோன்று தடுப்பணை, செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளதால் கோவையில் கணிசமான அளவுக்கு நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக அனைத்து ஓடைகளிலும் தண்ணீர் சென்றது.

இதனால் இந்த ஓடைகளின் அருகில் இருக்கும் விவசாய நிலங்களில் குறைந்தது 50 அடிக்கு கீழ் தண்ணீர் இருக்கிறது. அனைத்து ஓடைகளிலும் தடுப்பணை, செறிவூட்டும் கிணறுகள் அமைத்து விட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு இல்லை. அதற்கான பணிகள்தான் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து