கடத்தூர்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் நபிகள் நாயகம் குறித்து தவறாக பேசியதாக பா.ஜ.க. நிர்வாகி கல்யாணராமன் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஈரோடு மாவட்டம் கோபி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நேற்று காலை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் சந்தித்து பேசினார்.
பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மேட்டுப்பாளையத்தில் பிரதமர் மோடியை தவறாக சித்தரித்த இஸ்லாமிய அமைப்புகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமல் கல்யாணராமனை கைது செய்து உள்ளனர்.
கல்யாணராமன் தவறாகவோ, அவதூறாகவோ எதுவும் பேசவில்லை. உள்நோக்கத்தோடு கல்யாணராமன் மீது புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டார். கல்யாணராமனுக்கு கொலை மிரட்டல் உள்ளது. அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இஸ்லாமியர்கள் வாக்குகளைப் பெறவே கைது செய்யப்பட்டுள்ளார். அதை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் விடுவிப்பதில் இரு கட்சிகளும் அரசியல் செய்கிறது. இன்று (புதன்கிழமை) வேளாண் சட்டங்களை ஆதரித்தும், கல்யாணராமன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் வேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அண்ணா நினைவு நாளில், கோவில்களில் பொது விருந்து நடத்துவது ஆகம விதிகளுக்கு விரோதமானது. இதை கண்டித்தும் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.