மாவட்ட செய்திகள்

கூடலூர்- ஊட்டி மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்ப்பு

கூடலூர்- ஊட்டி மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. பாறைகள் விழுந்ததால், அந்த வழியே 16 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

தினத்தந்தி

கூடலூர்,

கூடலூரில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கூடலூர்- ஊட்டி மலைப்பாதையில் ஊசிமலை காட்சிமுனைக்கும் தவளமலைக்கும் இடையிலான பகுதியில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது ஊட்டியில் இருந்து கூடலூருக்கும், கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக ஊட்டிக்கும் வந்த சுற்றுலா வாகனங்கள், அரசு பஸ்கள், லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சிறிது நேரத்தில் அதே இடத்தில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் கூடலூர்- ஊட்டி இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, பாறைகளை அகற்றும் பணி நடந்தது. ஆனால் அது முடியவில்லை. இதனிடையே ஊட்டியில் இருந்து வந்த சிறிய ரக வாகனங்களை தலைக்குந்தா, கல்லட்டி, மசினகுடி வழியாக அதிகாரிகள் திருப்பி விட்டனர். ஆனால் கூடலூரில் இருந்து வாகனங்களை இயக்க அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு அந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன. அதில் பாறைகள் துண்டு, துண்டாக உடைந்து சிதறின. பின்னர் காலை 11 மணிக்கு பொக்லைன் எந்திரங்கள் உதவியுடன் அவை அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும் அதே இடத்தில் எப்போது வேண்டுமானாலும் உருண்டு விழும் வகையில் சாலையோரத்தில் ஆபத்தான பாறைகள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர் அவற்றையும் வெடி வைத்து தகர்க்க திட்டமிடப்பட்டது. இருப்பினும் மலைப்பாதையில் இரவு, பகலாக காத்திருக்கும் வாகனங்களின் போக்குவரத்தை தொடங்க அதிகாரிகள் அனுமதித்தனர். இதனால் 16 மணி நேரத்திற்கு பிறகு கூடலூரில் இருந்து ஊட்டிக்கு போக்குவரத்து தொடங்கியது. ஆனாலும் பாறைகள் உருண்டு விழுந்த இடத்தில் அதிகளவு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு கருதி ஒரு வழியாக மட்டுமே வாகனங்கள் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து ஆர்.டி.ஓ. முருகையன் கூறும்போது, மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மேலும் சில பாறைகள் ஆபத்தான நிலையில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும். அதுகுறித்து புவியியல் துறையினர் ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின்னரே அந்த பாறைகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கூடலூரில் இருந்து நாடுகாணி வழியாக கேரளாவுக்கு செல்லும் மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி அந்த வழியே கனரக வாகனங்களை இயக்க கேரள அதிகாரிகள் தடை விதித்து உள்ளனர். இதனால் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு கனரக வாகனங்கள் இயக்கப்பட வில்லை.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை