ஆலோசனை கூட்டம்
பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, மாதிரி நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தி.மு.க. சார்பில் வக்கீல் சந்துரு, அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. பாலகங்கா, காங்கிரஸ் துணை தலைவர் தாமோதரன், பா.ஜ.க.வின் சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-
பிரசார நேரம்
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள் உள்பட 27 ஆயிரம் அலுவலர்களுக்கு வரும் திங்கட்கிழமை முதல்கட்ட பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் பங்கேற்காதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 45 பறக்கும் படையினர் குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரசாரம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையும், பொதுக்கூட்டங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நடத்த அனுமதி உண்டு. பொதுக்கூட்டங்கள் இரவு 10 மணி வரை நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று கட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பா.ஜ.க. சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் கூறும்போது, தேர்தல் பிரசாரத்தின்போது பல எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அமைச்சர்கள் சென்னையில் முக்கிய இடங்களில் உள்ளனர். அப்போது வீடுகளில் பணப்பட்டுவாடா நடைபெறுவது குறித்து புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தனிநபர் வீட்டில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொள்ளவும் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஜெ.விஜயாராணி, விஷூ மஹாஜன், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், போலீஸ் இணை கமிஷனர் சா.பிரபாகரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.