மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வே மேலாளர் அலுவலகத்தில் வர்த்தக பிரிவு, பொதுப்பிரிவு, ஊழியர் விவகார பிரிவு, என்ஜினீயரிங் பிரிவு, சிக்னல் மற்றும் தொலைதொடர்பு பிரிவு, கணக்குப்பிரிவு, எலக்ட்ரிக்கல் பிரிவு ஆகியவற்றில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மதுரை கோட்டத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், கேரள மாநிலம் கொல்லம் ஆகிய மாவட்டங்களில் உள்ள ரெயில் நிலையங்கள் உள்ளன. கொரோனா ஊரடங்கால், கடந்த 72 நாட்களாக கோட்ட மேலாளர் அலுவலகத்தில் 30 சதவீத பணியாளர்கள் மட்டுமே பணியாற்றி வந்தனர். கடந்த வாரம் 50 சதவீத பணியாளர்கள் பணிக்கு வந்தனர். இந்த நிலையில், கோட்ட மேலாளர் அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவு அலுவலுகங்களும் நேற்று முதல் 100 சதவீத பணியாளர்களுடன் வழக்கம் போல செயல்பட தொடங்கியது. பணிக்கு வரும் பணியாளர்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், ஒன்றாக சேர்ந்து உணவு மற்றும் தேநீர் அருந்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்துக்குள் வரும் போது கிருமிநாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்ய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அலுவலக பணியாளர்கள் தவிர, பொதுமக்கள் யாரும் அலுவலகத்துக்குள் வந்து செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.