மும்பை,
4 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர்.
மும்பையில் கலப்பட பால் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை கமிஷனர் சைலேஷ் ஜாதவிற்கு புகார்கள் வந்தன. இந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் மும்பையில் உள்ள தகிசர் சுங்கச்சாவடி, மான்கூர்டு சுங்கச்சாவடி, ஐரோலி சுங்கச்சாவடி, முல்லுண்டு எல்.பி.எஸ் ரோடு, முல்லுண்டு கிழக்கு சுங்கச்சாவடி ஆகிய பகுதிகளில் பால் ஏற்றி வந்த வேன்களை வழிமறித்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் வேன்களில் இருந்து 4 லட்சத்து 62 ஆயிரத்து 482 லிட்டர் பால் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகளில் சிலவற்றை பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பினர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது:-
தற்போது சந்தேகத்தின்பேரில் பல நிறுவனங்களின் பால் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளோம். அவை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் அந்த பாக்கெட்டுகளில் இருந்தது கலப்பட பால் என்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.