பள்ளிப்பட்டு,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியம் கதன நகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 65). அரசு பஸ் டிரைவராக இருந்து ஓய்வு பெற்றவர். நேற்று காலை இவர் சோளிங்கரில் இருந்து வாலாஜாபேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
புதுகுடியனூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த சைக்கிள் மீது மோட்டார் சைக்கிள் மோதியது,
இதில் ராஜாவும், சைக்கிளில் வந்த புத்தரி கிராமத்தை சேர்ந்த வேலு (47) என்பவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் பஸ் டிரைவர் ராஜா வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். படுகாயம் அடைந்த வேலுவை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கொண்டபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.