பழனி,
பழனி அருகே இரவிமங்கலம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஆய்வு மாணவர்கள் அகழாய்வு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வயல்வெளியில் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் ஒரு சிலை இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
உடனே அந்த சிலையை பத்திரமாக மீட்டு சேதம் அடையாத வகையில் அதனை சுத்தப்படுத்தினர். அப்போது அது பத்ரகாளியம்மன் சிலை என்பது தெரியவந்தது. அம்மன் அமர்ந்த நிலையில் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது. சிலையின் ஒரு ஓரத்தில் லேசான சேதம் ஏற்பட்டிருந்தது. பத்ரகாளியம்மன் சிலை குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறியதாவது:
அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்ட பத்ரகாளியம்மனின் இடதுகால் அசுரனை மிதித்தபடியும், வலது கால் ஒரு பீடத்தின் மீது வைத்தபடியும் உள்ளது. அம்மன் சிலையின் தலைப்பகுதியில் மகுடமும், இடது முன் கையில் கபாலமும், வலது முன் கையில் சூலமும் இடம்பெற்றிருந்தது.
சிலையின் பின்பகுதியில் இடப்புறம் உள்ள 3 பின் கைகளில் உடுக்கை, கேடயம், மணி ஆகியவை உள்ளன. அதே போல் வலது 3 பின் கைகளில் கடாயுதம், வாள் ஆகியவைகள் உள்ளன. இடுப்பு சிறுத்த நிலையில் சிலை நளினமாக அமைக்கப்பட்டுள்ளது. சிலை 100 செ.மீ உயரம் மற்றும் 137 செ.மீ சுற்றளவுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணிகலன்கள், ஆடை வடிவமைப்பு, சிலை வடிவமைப்பு ஆகியவை கி.பி. 10ம் நூற்றாண்டில் பின்பற்றப்படும் வழிமுறைகளை பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதால் இந்த சிலை 10ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெளிவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.