செங்குன்றம்,
ஆட்டோவில் கஞ்சா கடத்திவரப்படுவதாக வந்த தகவலின்பேரில் புழல் உதவி கமிஷனர் வெங்கடேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் ஏட்டுக்கள் பன்னீர்செல்வம், ஜானகிராமன், சங்கர் ஆகியோர் புழல் சூரப்பட்டு சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. போலீசாரை கண்டதும் அதன் டிரைவர், ஆட்டோவை திருப்பிக்கொண்டு வேகமாக சென்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த ஆட்டோவை விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்தனர்.
விசாரணையில் ஆட்டோவை ஓட்டிவந்தவர் சென்னை அம்பத்தூர் திருவேங்கடம் நகரைச் சேர்ந்த பிரவீன்குமார் (வயது 19) என்பதும், இவர் சென்னை கொடுங்கையூரில் இருந்து ஒரு நபரிடம் கஞ்சாவை வாங்கி அம்பத்தூரில் விற்பனை செய்ய ஆட்டோவில் கடத்திச்செல்வதும் தெரிந்தது.
இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான 2 கிலோ கஞ்சாவும், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.