ஆட்டையாம்பட்டி,
சேலம் மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள கலைஞர் காலனியை சேர்ந்தவர் சம்பத் (வயது 45). இவர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பத் நேற்று முன்தினம் தனியார் மருத்துவக்கல்லூரி எதிரே கொள்ளுக்கரடு பகுதி அருகே உள்ள ஒரு பள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்தனர். இதில், இறந்து கிடந்த சம்பத், 10-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியிடம் சில்மிஷம் செய்து வந்ததாகவும், இதில் ஆத்திரம் அடைந்த மாணவியின் சகோதரர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்து இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்த ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு தொடர்பாக 10 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.