திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள புதிய இருளஞ்சேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் காமேஷ் (வயது 33). விவசாயி. இவர் காட்டுகூட்டுச்சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பாரதி (22) என்ற மனைவியும், மித்ரன் என்ற மகனும், நிகிதா என்ற மகளும் உள்ளனர். நேற்று இரவு 7 மணியளவில் காமேஷ் வேலையின் காரணமாக தனது மோட்டார் சைக்கிளில் இருளஞ்சேரி ஆலமரம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளை வழி மறித்த மர்ம நபர்கள் அவரை கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் வெட்டியுள்ளனர்.
இதில் அவர் நிலை தடுமாறி சாலையோரம் கீழே விழுந்தார். பின்னர் மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் காமேசின் முகத்தில் பலமாக வெட்டி சிதைத்தனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார்.
கொலையாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் இறந்த காமேசின் மனைவி மற்றும் உறவினர்கள், இருளஞ்சேரியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து அவரது உடலை கண்டு கதறி அழுத சம்பவம் காண்போர் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த காமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் யார்? எதற்காக அவரை படுகொலை செய்தனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.