மாவட்ட செய்திகள்

கர்நாடக புதிய பட்ஜெட் தாக்கல் செய்யும் விவகாரம்: சித்தராமையா-குமாரசாமி இடையே மறைமுக மோதல் வலுக்கிறது

கர்நாடக புதிய பட்ஜெட் தாக்கல் செய்யும் விவகாரத்தில் சித்தராமையா-குமாரசாமி இடையே மோதல் வலுத்து வருகிறது.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி கடந்த மே மாதம் 23-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி தவிர 25 மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வருகிற 5-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று குமாரசாமி அறிவித்துள்ளார். பட்ஜெட் தயாரிப்பு குறித்து துறை வாரியாக மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் குமாரசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, ஏற்கனவே 2018-19-ம் ஆண்டுக்கு கர்நாடக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களை அமல்படுத்தினாலே போதும் என்றும் கூறினார். தேவைப்பட்டால் துணை பட்ஜெட்டை குமாரசாமி தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கூறினார்.

இதை நிராகரித்துவிட்ட குமாரசாமி டெல்லி சென்று ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினார். புதிய பட்ஜெட் தாக்கலுக்கு ராகுல் காந்தியின் ஒப்புதலை பெற்றார். புதிய பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் குமாரசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் உஜ்ஜிரி ஆயுர்வேத இயற்கை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிலர் நேரில் சந்தித்து பேசினர்.

அப்போது, குமாரசாமி காங்கிரஸ் பட்ஜெட்டை புறக்கணித்துவிட்டு புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்து இருப்பதற்கு சித்த ராமையா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் பேசிய பேச்சு அடங்கிய வீடியோ கசிந்து தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது. ரகசியமாக பேசிய பேச்சு வீடியோ பகிரங்கமானதால், சித்தராமையாவுக்கு அதிருப்தி இருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.

இதற்கு குமாரசாமி சற்று காரமாகவே பதிலளித்து உள்ளார். அதாவது நேற்று பெங்களூரு விதான சவுதாவில் கூட்டுறவுத்துறை, கூட்டுறவு வங்கி அதிகாரிகளுடன் விவசாய கடன் தள்ளுபடி தொடர்பாக குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் குமாரசாமி பேசுகையில், யாருடைய தயவிலும் நான் இல்லை என்று கூறினார். சித்தராமையாவின் பெயரை குறிப்பிடாமல் குமாரசாமி அவரை குறிவைத்தே பேசி இருக்கிறார். விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்த யாரிடம் இருந்தும் தான் பாடம் கற்க தேவை இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் சித்தராமையா, குமாரசாமி இடையே மறைமுகமான மோதல் வலுத்து வருவது உறுதியாகி உள்ளது.

இந்த மோதல் எதுவரை செல்லுமோ தெரியவில்லை. காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியில் ஒருமித்த கருத்து இல்லை என்பது இதன் மூலம் வெளிப்படுகிறது. கூட்டணி ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக இருப்பவர் சித்தராமையா. அவர் புதிய பட்ஜெட் தாக்கல் செய்ய எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்து வருவது கூட்டணி ஆட்சிக்குள் பல்வேறு அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது. கர்நாடக அரசின் முக்கியமான கொள்கை முடிவுகளுக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஒப்புதல் தேவை என்பது குறிப் பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து