வண்டலூர்,
தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை காமராஜர் நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் நாகேஸ்வரன்(வயது 21). செங்கல்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று நாகேஸ்வரன் தனது நண்பர் ஜாபர் சாதிக் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தார். சிங்கபெருமாள்கோவில் அருகே சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை தடுப்பு கம்பியின் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த நாகேஸ்வரன் மார்பில் கம்பி குத்தியது. உயிருக்கு போராடிய அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலே நாகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது நண்பர் ஜாபர் சாதிக் லோசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.