மாவட்ட செய்திகள்

அய்யம்பாளையம் பகுதியில் இரவு, பகலாக ஓடைகளில் மணல் அள்ளும் கும்பல் - நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

அய்யம்பாளையம் பகுதியில், ஓடைகளில் இரவு, பகலாக தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

பட்டிவீரன்பட்டி,

பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையத்தை சுற்றி நொச்சிஓடை, சின்னஓடை, புலியூத்து ஓடை, பூசாரி ஓடை, சிவக்காட்டு ஓடை, முத்துப்பேச்சி ஓடை, எருக்காட்டு ஓடை, வறட்டாறு ஓடை போன்ற 15-க்கும் மேற்பட்ட ஓடைகள் உள்ளன. இதேபோல் சித்தரேவை சுற்றி வண்ணாம்பாறை ஓடை, இனிச்சபள்ளி ஓடை, வறட்டோடை, ஓணங்கரட்டு ஓடை என 10-க்கும் மேற்பட்ட ஓடைகள் உள்ளன.

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி இந்த ஓடைகள் அமைந்துள்ளதால் மழை காலத்தில் தண்ணீரில் மணல் அதிகளவில் அடித்து வரப்பட்டு ஓடைகளில் நிறைந்து காணப்படும். கடந்த மாதம் கஜா புயலினால் ஏற்பட்ட மழை தண்ணீரில் அதிகளவில் மணல் ஓடைகளில் குவிந்து கிடக்கிறது.

இதை வாய்ப்பாக பயன்படுத்தி மர்மநபர்கள், இரவு நேரங்களில் ஓடைகளில் மணல் அள்ளி வருகின்றனர். மணல் அள்ளுவதற்காக ஓடைகளில் தடம் அமைத்துள்ளனர். டிராக்டர், லாரிகளில் 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டு வருவதால் ஓடைகளை சுற்றியுள்ள விவசாய தோட்ட கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதால் ஓடையின் அருகே உள்ள விவசாய நிலங் களில் உள்ள மரங்கள் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மணல் அள்ளுவதை தடுக்க இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் இந்த பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சித்தரேவு பகுதியில் இரவு நேரத்தில் மணல் அள்ளி வந்த டிராக்டரை விவசாயிகள் சிறை பிடித்தனர். அதில் வந்தவர்கள் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பியோடினர். எனவே ஓடைகளில் மணல் அள்ளுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்