ரெயிலை மறித்து போராட்டம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகர் ரெயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து சென்னை செல்வதற்காக நேற்று காலை முதல் மின்சார ரெயில்கள் செல்லவில்லை. இதனால் சென்னை செல்வதற்காக வந்த பயணிகள் ரெயில் நிலையத்தில் நீண்டநேரம் காத்திருந்தனர்.
மின்சார ரெயில்கள் வராததற்கு காரணம் குறித்து கேட்டபோது ரெயில்வே ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. அதே நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் மட்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன.
இதனால் சென்னை செல்லும் ரெயில்கள் வராமல் பரிதவித்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அப்போது சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி வந்த மின்சார ரெயிலை மறித்த பயணிகள், தண்டவாளத்தில் இறங்கி ரெயில் முன் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்ப கோளாறு
பின்னர்தான் எண்ணூர் முதல் கத்திவாக்கம் வரை உள்ள ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் வராதது தெரிந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளுடன் ரெயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ரெயில் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் மின்சார ரெயில்கள் தாமதமாக செல்வதாகவும், மாற்றுப்பாதையில் மின்சார ரெயில்கள் செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர்.
அதற்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னைக்கு மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டது. இதனால் ரெயில் மறியலை பயணிகள் கைவிட்டனர். பயணிகளின் ரெயில் மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் 2 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.