கடமலைக்குண்டு:
கடமலைக்குண்டு ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு கரட்டுப்பட்டி அருகே மூலவைகை ஆற்றில் 3 உறைகிணறுகளில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சி குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. குடிநீர் வினியோகத்திற்காக ஆற்றங்கரை அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு டிரான்ஸ்பார்மர் பழுதானதால் மின்தடை ஏற்பட்டு கடமலைக்குண்டு ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. டிரான்ஸ்பார்மரை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடமலைக்குண்டு மின்வாரிய அலுவலகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் தற்போது வரை டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்படவில்லை. இதனால் கடமலைக்குண்டு ஊராட்சியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வேறு கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் சிலர் மூலவைகை ஆற்றுக்கு சென்று உறை கிணற்றில் இருந்து ஆபத்தை உணராமல் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதனால் உறை கிணற்றில் உள்ள குடிநீர் மாசடைந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து டிரான்ஸ்பார்மர் பழுதை சரி செய்து கடமலைக்குண்டு ஊராட்சிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.