கரூர்,
ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 11-ந் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடந்து வருகிறது. இதில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 10 விடைத்தாள்களை திருத்த கொடுத்தால் 5 விடைத்தாள்களை மட்டுமே திருத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு ஆசிரியர்கள் வழக்கம் போல வந்தனர். மையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கணேசமூர்த்தி விடைத்தாள்களை ஆசிரியர்களுக்கு வழங்கினார். அப்போது கொடுக்கப்படும் விடைத்தாள்களை முழுமையாக திருத்தி கொடுக்கப்படும் என ஆசிரியர்கள் எழுதி கொடுக்கும் படி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சங்கத்தை சேர்ந்தவர்களிடம் முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார். அதற்கு ஆசிரியர்கள் எழுதி கொடுக்க மறுத்தனர். இதனால் அச்சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு விடைத்தாள்கள் திருத்தி கொடுக்க மறுத்தார்.
தங்களுக்கு விடைத்தாள்கள் வழங்கும் படியும், பாதி திருத்தி கொடுப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் முழுமையாக திருத்துவதாக இருந்தால் மட்டும் எழுதி கொடுத்து விட்டு விடைத்தாள்களை திருத்தும் படி முதன்மை கல்வி அதிகாரி கூறினார். இதனால் காலை முதல் மாலை வரை பேச்சுவார்த்தை நீடித்தது. ஆனால் ஆசிரியர்கள் எழுதி கொடுக்காததால் அவர்களுக்கு விடைத்தாள்கள் திருத்த வழங்கப்படவில்லை. முதன்மை கல்வி அதிகாரி இருந்த அறை முன்பு ஆசிரியர்கள் திரண்டு நின்றனர்.
இதற்கிடையில் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தினர், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி முதுகலை ஆசிரியர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர்.
முதன்மை கல்வி அதிகாரியின் நடவடிக்கையின் காரணமாக விடைத்தாள் திருத்தும் மையத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. இன்று (செவ்வாய்க்கிழமை) விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுவதாக அச்சங்கத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.