வேலூர்
வேலூரில் 2-வது நாளாக தபால், எல்.ஐ.சி. ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2-வது நாளாக ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் 2 நாள் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே 2-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடந்தது. எல்.பி.எப். மாவட்ட தலைவர் கே.ஆர்.சுப்பிரமணி தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சிம்புதேவன், எல்.பி.எப். நிர்வாகி பாலகிருஷ்ணன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், எல்.பி.எப். மாவட்ட கவுன்சில் பொருளாளர் ரமேஷ், எச்.எம்.எஸ். மாநில செயலாளர் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில், பொதுத்துறை நிறுவனத்தை விற்பனை செய்யக்கூடாது, தொழிலாளர் சட்ட தொகுப்பை நான்கையும் கைவிட வேண்டும், பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை குறைத்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
எல்.ஐ.சி., தபால் ஊழியர்கள்
இதேபோன்று வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் வேலூர் கோட்ட காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க பொதுச்செயலாளர் ராமன் தலைமை தாங்கினார். தலைவர் பழனிராஜ், பொருளாளர் செந்தில்வேல், துணைத்தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், எல்.ஐ.சி. பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும், எல்.ஐ.சி.யை தனியார் மயமாக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் அவர்கள் பணி புறக்கணிப்பு செய்தனர்.
இதேபோன்று வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் தேசிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் நிர்வாகிகள் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தபால் ஊழியர்கள் பணிகளை புறக்கணித்ததால் தலைமை தபால் நிலைய அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவ இளைஞரணி முன்னணி மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் சுந்தர், பரசுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வங்கி ஊழியர்கள் நேற்றும் பணிகளை புறக்கணித்தனர். அதனால் ஒரே நாளில் ரூ.150 முதல் ரூ.200 கோடி வரையிலான பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. வங்கி மற்றும் ஏ.டி.எம். சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.