வில்லியனூர்,
வில்லியனூர் அரும்பார்த்தபுரத்தில் ரூ.30 கோடி செலவில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கான கட்டுமான பணிக்கு இடம் கையகப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் கட்டுவதற்கு நிலம் வழங்கிய நில உரிமையாளர்களை அழைத்து அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். வில்லியனூர் துணை கலெக்டர் அலுவலகத்தில் இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அப்போது நில உரிமையாளர்களுக்கு மத்தியில் அமைச்சர் நமச்சிவாயம் பேசியதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் முதல் முறையாக புதிய முறையில் நிலஆர்ஜித பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கான வழிமுறைகள் அதிகமாக உள்ளதால் நில ஆர்ஜித பணிகள் சற்று தாமதமாகவே நடந்து வருகிறது. இப்பணிகளை விரைவில் முடித்து அரசின் வழிகாட்டுதல் மதிப்பின்படி நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
அந்த தொகை போதவில்லை என்று நில உரிமையாளர்கள் பிரச்சினை செய்து நேரத்தை வீணடித்தால் இந்த பணிக்காக நமக்கு மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காமல் போய்விடும். இந்த மேம்பால திட்ட பணிக்காக மத்திய அரசு கொடுத்த காலக்கெடு ஏற்கனவே முடிந்துவிட்டது தான் இதற்கு காரணம். எனவே காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசிடம் கோரியுள்ளோம். இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
தொடர்ந்து நில உரிமையாளர்கள் கூறியதாவது:- நில உரிமையாளர்கள் ஏற்கனவே வங்கியில் அதிகமாக கடன் வாங்கியுள்ளோம். நீங்கள் கொடுக்கும் இழப்பீடு தொகையை வைத்துதான் வேறு இடம் வாங்கி மாற்றுத் தொழில் செய்ய வேண்டும். எனவே தாமதிக்காமல் உடனடியாக இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றனர்.
அதற்கு அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்து கூறும்போது, தற்போது உள்ள சந்தை நிலவரப்படி உங்களுக்கு இன்னும் 2 மாதத்தில் இழப்பீடு தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நிலம், கட்டிடம், மரம் உள்ளிட்ட அனைத்துக்கும் இழப்பீடு கொடுக்கப்படும். சட்டப்படி உங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இதன்பின் நிருபர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறுகையில், அரும்பார்த்தபுரம் ரெயில்வே மேம்பாலத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இது சம்பந்தமாக நில உரிமையாளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சட்டப்படியான இழப்பீடு வழங்கப்பட்டு இன்னும் 6 மாதத்தில் மேம்பாலத்தை கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் புதுச்சேரி மாவட்ட கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முக சுந்தரம், வில்லியனூர் தாசில்தார் மேத்யூ பிரான்சிஸ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.