திருக்கோவிலூர்,
திருக்கோவிலூரில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டமன்றத்தில் அறிவித்தார். இதன்படி வரும் கல்வியாண்டிலேய கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரி செயல்பட உள்ள தற்காலிக கட்டிடத்தையும், எதிர்காலத்தில் கல்லூரி அமைய உள்ள இடத்தையும் உயர் கல்வித்துறையின் முதன்மை செயலாளர் கார்த்திகேயன் தலைமையிலான குழுவினர் நேற்று பார்வையிட்டனர். அப்போது திருக்கோவிலூர் நகரமன்ற தலைவர் டி.என்.முருகன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் வக்கீல் எம்.தங்கம், நகரமன்ற உறுப்பினர்கள் எஸ்.சக்திவேல், ஐ.ஆர்.கோவிந்தராஜன், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகி என்.கே.வி.ஆதிநாராயணமூர்த்தி மற்றும் உயர் கல்வித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதேபோல் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சென்னை கல்லூரிகள் கல்வி இயக்குனர் பூரணசந்திரன், வேலூர் மண்டல இணை இயக்குனர் காவேரியம்மாள் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது 25 கணினிகளுடன் கூடிய புதிய ஆய்வகத்தை அவர்கள் திறந்து வைத்தனர். தொடர்ந்து கல்லூரியில் காலி பணியிடங்களை நிரப்பவும், தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதாகவும் அவர்கள் உறுதியளித்தனர். தொடர்ந்து அரசுக்கு சொந்தமான அத்தியூரில் உள்ள நிலத்தை அவர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது திருக்கோவிலூர் கோட்டாட்சியர் யோகஜோதி, கல்லூரி முதல்வர் ரேவதி, சங்கராபுரம் தாசில்தார் இந்திரா, அரியலூர் வருவாய் ஆய்வாளர் இளையராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.