திருவள்ளூர்,
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங் களை எழுப்பினார்கள்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் அனைவரும் காக்களூர் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். நாங்கள் மின்இணைப்பு, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பயன்படுத்தி வருகிறோம். அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுநாள் வரையிலும் எங்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
புகார் மனு
இதனால் நாங்கள் அரசின் பிற சலுகைகளை பெறமுடியாமல் அவதிப்பட்டு வருகிறோம். எனவே எங்களுக்கு இனிமேலும் அரசு அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் இலவச வீட்டுமனை பட்டா கிடைக்க மாவட்ட கலெக்டரிடம் முறையிட வந்தோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் அவர்கள் இது தொடர்பான புகார் மனுவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு தலைவர் நீலவானத்து நிலவன் தலைமையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.