அழகியமண்டபம்,
நாகர்கோவில் அருகே திருப்பதிசாரம் பொய்கை நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 54). இவர் சிவசேனா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளராக உள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி தனது சொகுசு காரில் வந்துகொண்டிருந்தார்.
கார் வில்லுக்குறி அருகே பெட்ரோல் பங்க் பகுதியில் வந்தது. அப்போது, நாகர்கோவிலில் இருந்து மணலிக்கரை நோக்கி சென்ற அரசு பஸ்சும், காரும் திடீரென நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி பஸ்சின் அடியில் சிக்கியது.
இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி கண்ணன் படுகாயமடைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள், இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், படுகாயமடைந்த கண்ணனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 2 மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக வில்லுக்குறியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்தனர். மேலும், குருந்தன்கோடு வருவாய் ஆய்வாளர் ராஜா, கிராம நிர்வாக அலுவலர் வேலப்பன் ஆகியோரும் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த விபத்து குறித்து இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.