புதுக்கடை,
குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ந் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கொடூரமாக கொலை செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபிக், திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் ஆகிய 2 பயங்கரவாதிகள் சப்-இன்ஸ்பெக்டரை தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பயங்கரவாதிகளை பிடிக்க தமிழக போலீசார் 10 தனிப்படை அமைத்தனர். மேலும் கேரள மாநில போலீசாரும் தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தேடப்பட்டு வந்த 2 பயங்கரவாதிகளையும் கர்நாடக மாநிலம் உடுப்பி இந்திராலி ரெயில் நிலையத்தில் சுற்றி வளைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர்கள் குழித்துறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
முகநூலில் கருத்து பதிவு
மேலும், சமூக வலைதளங்களை போலீசார் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது, தேங்காப்பட்டணம் தோப்பு பகுதியை சேர்ந்த நவாஸ் என்ற தேங்காய் நவாஸ் (வயது 45) என்பவர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும், பொதுமக்களிடையே அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மத கலவரத்தை தூண்டும் விதமாகவும் முகநூலில் கருத்துகளை பதிவுகள் செய்தார்.
மேலும், கேரள மாநிலம் கொடுங்கலூர் தேவி கோவிலுக்கு செல்லும் பக்தர்களை அவதூறாக பதிவிட்டார்.
கைது
இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ புதுக்கடை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி வழக்குப்பதிவு செய்து நேற்று காலை நவாஸ் என்ற தேங்காய் நவாசை கைது செய்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், நவாசுக்கு சொந்த ஊர் தேங்காப்பட்டணமாகும். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் சில வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் அவர் திருவனந்தபுரத்துக்கு குடும்பத்துடன் இடம் பெயர்ந்து அங்குள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். மேலும் அவர் காங்கிரஸ் கட்சி பிரமுகராக உள்ளார் என்பதும் தெரிய வந்தது. பின்னர் நவாசை போலீசார் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி குழித்துறையில் உள்ள சப்-ஜெயிலில் அடைத்தனர்.
இதற்கிடையே நவாசுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கலாம் என கருதி அவரை இன்று (திங்கட்கிழமை) காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.