மாவட்ட செய்திகள்

நூதன முறையில் மோசடி நண்பர் என முகநூலில் பேசி ரூ.2¾ லட்சம் அபேஸ்

மதுரையில் நண்பர் என முகநூலில் பேசி ரூ.2¾ லட்சத்தை அபேஸ் செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

மதுரை,

மதுரை பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன்(வயது 54). இவரது முகநூல் கணக்கிற்கு புதிதாக ஒரு கணக்கில் இருந்து அழைப்பு வந்தது. அதில் அறிமுகம் செய்த மர்ம நபர் தன்னை தங்களின் பழைய நண்பர் என்று கூறி அவரிடம் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தன்னுடைய மைத்துனர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் அவரது மகள் மிகவும் கஷ்டப்படுவதால் அதற்கு பணம் கொடுத்து உதவும்படி கூறியுள்ளார். அதை நம்பி சீனிவாசன் பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்பி உள்ளார்.

மோசடி

மேலும் அந்த நபர் பல்வேறு காரணங்களை கூறி சீனிவாசனிடமிருந்து 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். இந்தநிலையில் சந்தேகம் அடைந்த சீனிவாசன் மற்ற நண்பர் மூலம், அந்த நபர் குறித்து விசாரித்தார். மேலும் அவரின் முகநூல் பக்கத்தை ஆய்வு செய்த போது, அது போலி என்பது தெரியவந்தது. அதன் பின்னர் சீனிவாசன் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதை தொடர்ந்து அவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பண மோசடியில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை தேடி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

மதுரை நடராஜ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ஓய்வூதியரான இவரது செல்போன் எண்ணிற்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய மர்மநபர் உங்களுக்கு வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அதற்காக உங்கள் ஏ.டி.எம். கார்டு நம்பர் மற்றும் ரகசிய எண்ணை அனுப்பி வையுங்கள் என்று கூறினார்.

அதை நம்பிய சுப்பிரமணியன் செல்போன் மூலம் ஏ.டி.எம். கார்டு நம்பர் மற்றும் ரகசிய எண்ணை அனுப்பி வைத்து உள்ளார். இதனை பயன்படுத்தி அந்த நபர் சுப்பிரமணியனின் வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரத்தை அபேஸ் செய்தார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்து உள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து