நெல்லை,
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போட்டு செல்கின்றனர். மேலும் கலெக்டர் ஷில்பா, காணொலி காட்சி மூலம் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். இந்த நிலையில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுககனி தலைமையில் திரண்டு வந்து, அலுவலக வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களிடம் கோரிக்கை மனுவை புகார் பெட்டியில் போடுமாறு அறிவுறுத்தினார். அவர்கள் அந்த பெட்டியில் மனுவை போட்டனர்.
அந்த மனுவில், இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பாளையங்கோட்டை திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி கோவிலுக்கு 100 ஏக்கருக்கு அதிகமான சொத்து உள்ளது. அந்த சொத்தை சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து, பட்டா தயார் செய்யும் வேலையை செய்து வருகின்றனர். எனவே கோவில் நிலத்தை மீட்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை மொட்டையனூர் கிராம மக்கள், ஊர் நாட்டாமை பிச்சையா தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து, தங்களது ஊரில் உள்ள திருமண மண்டபத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.
பத்தமடையை சேர்ந்த உலகநாதன் என்பவருடைய மனைவி அண்ணாமலை, தனது நிலத்தை போலி ஆவணங்கள் முலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை மீட்டு தரவேண்டும் என்று மனு கொடுத்தார்.
நாம் தமிழர் கட்சியினர் மாநகர் மாவட்ட செயலாளர் கண்ணன், தெற்கு மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், செயலாளர் அப்பாக்குட்டி ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில், எங்கள் நாம் தமிழர் கட்சியின் சொக்கன்குடியிருப்பு ஊராட்சி செயலாளர் செல்வன் கொலைக்கு காரணமான தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரி கிருஷ்ணன், அ.தி.மு.க. பிரமுகர் திருமணவேல் உள்ளிட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் கொலை செய்யப்பட்ட செல்வனின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும், அவருடைய மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
முன்னீர்பள்ளம் ஆவரைகுளம் பகுதி மக்கள் வழங்கிய மனுவில், இலவச வீட்டு மனை பட்டா என்ற பெயரில் நில மோசடி செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட தலைவர் உடையார் தென் மண்டல செயலாளர் ராஜா பாண்டியன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர். அதில், இந்து கோவில்களில் வருகின்ற வருமானத்தை இந்துக்களுக்கே பயன்படுத்த வேண்டும். மேலும் இந்து அறநிலையத்துறை மூலம் இந்து மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நரிக்குறவர்கள் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.