பேராவூரணி,
தஞ்சை மாவட்டம் பேராவூரணி நீலகண்டன் 2-வது தெருவை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது57). இவர் பேராவூரணியில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த மாதம் 13-ந்தேதி லெட்சுமணன் கடையை மூடி விட்டு வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தனது வீட்டின் அருகே சென்றுகொண்டிருக்கும்போது தனது மோட்டார் சைக்கிளின் பின்னால் அதிவேகமாக வந்த கார் லெட்சுமணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். காரில் வந்த 6 பேர் கும்பல் லெட்சுமணனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி காரில் மின்னல் வேகத்தில் கடத்தி சென்றது. சத்தம் போட்டால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டினர்.
பின்னர் அந்த கும்பல் அவரிடம் கோடி கணக்கில் பணம் கேட்டு மிரட்டினர். பணம் தரவில்லை என்றால் உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர். இதனால் அவர் நிலைகுலைந்தார். இவரது கண்ணை கட்டி கடத்திச்சென்று மறைவிடத்தில் வைத்து குடும்பத்தாரிடம் செல்போனில் மிரட்டி ரூ.20 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை வாங்கினர்.
மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தால் உன்னையும் உன் குடும்பத் தாரையும் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டிவிட்டு அவரை கடத்தல் கும்பல் விடுவித்தனர். இதில் பாதிக்கப்பட்ட லெட்சுமணன் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சம்பவம் குறித்து 40 நாட்களுக்குப்பிறகு லெட்சுமணன் பேராவூரணி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன் பேரில் தனிப்படை போலீசார் கடத்தல் கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.