திருப்பூர்,
பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி நேற்று திருப்பூரில் பா.ஜனதா கட்சி சார்பில் கொடியேற்று விழா பல இடங்களில் நடைபெற்றது. வெள்ளியங்காடு நால்ரோட்டில் கொடியேற்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக பா.ஜனதா மாவட்ட தலைவர் சின்னசாமி, மாநில இளைஞர் அணி செயலாளர் காடேஸ்வரா தங்கராஜ், மாவட்ட செயலாளர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் காரில் ஊர்வலமாக அங்கு சென்றனர். அப்போது காலை 10 மணிக்கு வெள்ளியங்காடு ரோட்டோரம் இருந்த டாஸ்மாக் பாரில் மது விற்பனை நடந்தது. இதைத்தொடர்ந்து பா.ஜனதாவினர் அந்த பாரை முற்றுகையிட்டனர். சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதை தடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் மற்றும் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து 40-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்து தெற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். மேலும் 2 பேர் அங்கிருந்து தப்பி விட்டனர். சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பாரை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன் மறியல் போராட்டம் நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தாராபுரம் ரோடு என்.பி.நகரில் கொடியேற்று விழாவை முடித்து விட்டு பா.ஜனதாவினர் சென்றனர். அப்போது காலை 9.30 மணி அளவில் அப்பகுதியில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை நடந்ததை கண்டறிந்தனர். உடனடியாக பா.ஜனதாவினர் அந்த டாஸ்மாக் பாரை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ஊரக போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பாரில் மது விற்பனை செய்த 2 பேரை பிடித்து அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து ஊரக போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
பா.ஜனாதாவினர் டாஸ்மாக் பார்களை முற்றுகையிட்ட சம்பவங்களால் அந்த பகுதிகளில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.