தேனி,
இந்த சம்பவம் குறித்து ஈஸ்வரன் போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கே.கே.பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 48). இவர், அதே ஊரில் உரக்கடை நடத்தி வந்தார். ஈஸ்வரனுக்கு தோல் வியாதி இருந்தது. இதனால், அவருடைய தோல் வெள்ளை நிறத்தில் திட்டு, திட்டாக மாறியது. இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருடைய நண்பர் ஆனந்த் என்ற அப்துல்லா (38). இவர், கேரள மாநிலம் குமுளியில் தள்ளுவண்டியில் உணவுக்கடை நடத்தி வருகிறார். அப்துல்லாவின் தந்தை அப்துல்நாசர் என்பவர் தேனியை அடுத்துள்ள பூதிப்புரம் பகுதியில் மரக்காமலை அடிவாரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் அப்துல்லா தனது தந்தையை பார்க்க தோட்டத்துக்கு சென்றார். அப்போது அவருடன் ஈஸ்வரனும் வந்தார்.
இதற்கிடையே மரக்காமலை அருகில் சருத்துப்பாறை மலை உச்சியில் உள்ள ஒரு சுனையில் மூலிகை தீர்த்தம் இருப்பதாகவும், அதை குடித்தால் தோல் நோய் குணமாகும் என்றும் ஈஸ்வரனுக்கு நண்பர்கள் சிலர் கூறியதாக தெரிகிறது. இதனால் ஈஸ்வரனும், அப்துல்லாவும் நேற்று முன்தினம் மாலையில் அந்த மூலிகை தீர்த்தம் குடிப்பதற்காக சருத்துப்பாறை மலைக்கு சென்றனர்.
அந்த மலையில் சுமார் 1,500 அடி உயரத்தில் அந்த சுனை அமைந்துள்ளது. பாதை வசதி இல்லாத இந்த மலையில் கரடு முரடான பாறைகளுக்கு இடையே நடந்து சென்று சுனையில் தண்ணீர் குடித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது ஈஸ்வரன் திடீரென மயங்கி விழுந்து சற்றுநேரத்தில் இறந்துவிட்டார்.
இந்தநிலையில் அங்கிருந்து கீழே இறங்கி வந்த அப்துல்லா, இந்த விசயத்தை பூதிப்புரத்தில் உள்ள மக்களிடம் தெரிவித்தார். இது தொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் பழனிசெட்டிபட்டி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், பாலசுப்பிரமணி, தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு அருள்ராஜ் உள்பட போலீசாரும், மாவட்ட உதவி தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்களும் சம்பவ இடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.
நேற்று காலை 7 மணியளவில் புறப்பட்டு சென்ற மீட்பு குழுவினர் பகல் 11 மணியளவில் சம்பவ இடத்துக்கு சென்றடைந்தனர். அங்கு இருந்து ஈஸ்வரனின் உடலை பொதுமக்கள் உதவியுடன் டோலி கட்டி கீழே இறக்கி கொண்டு வந்தனர்.
பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, சுனையில் உள்ள தண்ணீரை மூலிகை தீர்த்தம் என்று நினைத்து குடிக்க சென்றுள்ளனர். குடித்து விட்டு வரும் போது ஈஸ்வரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் சுருண்டு விழுந்துள்ளார். இதில் சிறிது நேரத்தில் அவர் இறந்துள்ளார். இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பிறகே அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று தெரியவரும் என்றனர். இறந்து போன ஈஸ்வரனுக்கு முருகேஸ்வரி என்ற மனைவியும், அருண், பிரவேஷ் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
மூலிகை தீர்த்தம் குடிக்க சென்றபோது உயிரிழந்த ஈஸ்வரன் இறந்து கிடந்தது அபாயகரமான மலைப்பகுதியாகும். சுமார் 1,500 உயரம் கொண்ட மலை என்ற போதிலும் இதில் ஏறுவதற்கு பாதை வசதி கிடையாது. இங்கு பாறைகள் அதிகம் உள்ளன. கரடு, முரடான பகுதி. செங்குத்தான ஏற்றங்கள் நிறைந்த மலை. இதனால், மீட்பு குழுவினர் மலையடிவாரத்தில் இருந்து சம்பவ இடத்துக்கு செல்வதற்கு சுமார் 4 மணி நேரம் ஆனது. மீட்பு பணிக்கு பூதிப்புரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிலரும் போலீசாருக்கு உதவி செய்தனர்.