பெங்களூரு,
பா.ஜனதா பொதுச் செயலாளர் ஷோபா எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மைசூருவில் கன்னட இலக்கிய மாநாடு நடந்து முடிந்துள்ளது. இதில் மதசார்பற்ற கொள்கைகளை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் சிலர் மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் விமர்சனம் செய்ய அந்த மாநாட்டு மேடையை பயன்படுத்தி இருக்கிறார்கள். கர்நாடக அரசு திட்டமிட்டு இடதுசாரி சிந்தனையை ஊக்குவிக்கும் விதமாக கன்னட இலக்கிய மாநாடு நடத்தி முடித்துள்ளது.
இதன் மூலம் மாநில மக்களுக்கு தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாநாட்டு தலைவரே நேரடி காரணம். எனவே, சந்திரசேகர் பட்டீல் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். தாய் புவனேஸ்வரி, சாமுண்டீசுவரியை கும்பிடாத சந்திரசேகர் பட்டீலை எதற்காக கன்னட இலக்கிய மாநாட்டு தலைவராக கர்நாடக அரசு நியமனம் செய்தது?.
அடுத்து வரும் நாட்களில் இதுபோன்ற தவறுகள் நிகழாத வண்ணம் கர்நாடக சாகித்ய பரிஷத் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். மைசூரு மாநாட்டில் என்ன நடந்திருக்கக்கூடாதோ அது நடந்துவிட்டது. கன்னட மொழிக்கு மதம், சாதி, கட்சி பேதமில்லை. கன்னடம் பற்றி தெரியாதவர்களை இனிமேலாவது தொலைவில் வைக்க வேண்டும்.
இவ்வாறு ஷோபா கூறினார்.