சிவகங்கை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2 தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் பேரணியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 12 பேர் இறந்துபோனார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதேபோன்று சிவகங்கையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி ஆகியோர் தலைமை தாங்கினர். மேலும் மறியல் போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணசேகரன், விஸ்வநாதன், சிவகங்கை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் வக்கீல் மதி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பின்னர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 50 பேரை சிவகங்கை டவுன் போலீசார் கைதுசெய்தனர்.
இதேபோன்று திருப்புவனத்தில் உள்ள நரிக்குடி விலக்கு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியல் செய்த அய்யம்பாண்டி உள்பட 16 பேரை மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன் கைதுசெய்தார்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து காரைக்குடியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக் கணிப்பில் ஈடுபட்டனர்.