உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான குமரகுரு நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கனவுகளை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. உளுந்தூர்பேட்டை தொகுதியில் அனைத்து அரசு துறைகளிலும் வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தையும் நான் நேரடியாக கண்காணித்து வருகிறேன். உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.5 கோடி மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி தொடங்கும். மேலும் அனைத்து வீதிகளிலும் 100 எல்.இ.டி. விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக வைபாளையம் கிராமத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு விரைவில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.